பரஞானம்
கள்ளப் புலனைந்தின் கயமையைக் கட்டுலைக்க
மெல்லவே எனைவந் தாட்கொண்ட எந்தையே
எந்தையே எம்பிரான் என்தம்பிரனான் நீயே
என்முந்தை வினைகளெல்லாம் முறியவே செய்திட்டாய்
ஓங்கிஉயர்ந்த சோதிநீ என்னுட்கலந்த சோதிநீ
தாங்கிநிற்குஞ் சோதிநீ எனைத்தடுத்தாட்கொண்ட சோதிநீ
உருவில்லா அறுவன்நீ வெண்ணீறு விருப்பன்நீ
ஆசனம் கொடுத்துனை என்னங்கமாய் யமர்த்திவிட்டேன்
பேசநா வெழாது புன்கண்ணீர் புரண்டோட
புறமெல்லாம் போற்றுகின்ற புண்ணியனைப் பாடுகின்றேன்
எல்லையிலா சோதியவன் எங்குந் நிறைந்தவன்
வந்திருந் தென்னுளின்று நிறைவாய் அமர்ந்திட்டான்
முப்புறமும் அப்புறமாய் மெல்லவே சிரித்தவன்
சீரான தயாளனவன் என்சிந்தையுள் எழுந்தவன்
நெஞ்சுருக அன்பொழுக விருந்தொன்று வைத்திட்டால்
பஞ்சமெல்லாந் தீர்த்திடுவான் பாழாக விடமாட்டான்
கொஞ்சிடும் வஞ்சியரெல்லாம் வந்திங்கு வாழ்த்திடவே
விஞ்சிடும் அருளாளனவன் என்அன்னையின் காதலன்
மெச்சிய நாவுக்கெல்லாம் மேலான விருந்தாவான்
பற்றிய பக்தருக்கெல்லாம் பரஞானம் அளித்திடுவான்
No comments:
Post a Comment